Friday, September 18, 2015

என் பார்வை தன்னம்பிக்கைக் கட்டுரைகள் : முனைவர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி


எழுத்து சுகமான பேரானந்தம்.எழுதியதை வாசகர்கள் சரியாகப் புரிந்துகொண்டு கொண்டாடத் தொடங்கும்போது அடுத்த பக்கம் எழுதுவதற்கான ஊக்கம் பிறக்கிறது.

நான் தினமலரில் எழுதத்தொடங்கி ஓராண்டாகிவிட்டது. 

இந்த ஓராண்டில் என்னை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டுசென்ற அற்புதமான நாட்களை நினைத்துப் பார்த்தால் மனம் மகிழ்வடைகிறது. கல்லூரிவிழா ஒன்றை முடித்துவிட்டு துறையில் இருந்தேன். 


செல்பேசி ஒலித்தது..நான் மதுரை தினமலர் ஆசிரியர் ரமேஷ்குமார் பேசுகிறேன்..என்றவர் என் முகநூல் பதிவுகளைப் பற்றியும் அப்போது வெளியாகியிருந்த வானொலியின் வசந்தகாலம் கட்டுரை குறித்தும் மிகநுட்பமாகப் பேசினார். 

.காலை ஆறுமணிகெல்லாம் அனைத்து நாளிதழ்களையும் வாசித்துவிட்டு முனைவர் ராமசுப்பு அவர்களுடன் அடுத்த நாள் கட்டுரைகள் நேர்காணல்களை எடுப்பது குறித்துத் திட்டமிடுபவர் என அறிந்திருந்தேன்.

 யார் எந்த இதழில் என்ன நல்ல விஷயம் எழுதினாலும் எந்தப் பேதமும் இல்லாமல் உடன் பாராட்டும் இயல்புடையவர் என்று கேள்விப்பட்டேன். என் பார்வை குறித்து விளக்கினார். நீங்கள் என் பார்வைக்கு எழுதலாமே என்று அன்புடன் வேண்டினார். நான் மதுரை தினமலர் எங்கள் நெல்லைக்கு வராது என்று சொன்னேன். 

ஈ பேப்பரில் வருகிறதே என்று சொன்னார். வாசிக்கத் தொடங்கினேன். அத்தனை கட்டுரைகளும் துறைசார்ந்த வல்லுநர்கள் எழுதும் கருத்துக்கருவூலம் என்பதும் நம் தமிழ் மண்சார்ந்த,பண்பாடு சார்ந்த,கலை சார்ந்த,அருமையான நூல்கள் சார்ந்த, கல்வி,சுகாதாரம், உடல்நலம், மனநலம் சார்ந்த, தன்னம்பிக்கை சார்ந்த கட்டுரைகள் தினம்தினம் என் பார்வைக் கட்டுரைகளாக வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். 

நல்ல கருத்தியலை தினமலர் நாளிதழ் முன் வைக்க அரைப் பக்கத்தை ஒதுக்கும்போது நாம் ஏன் எழுதக்கூடாது? என்ற எண்ணம் தோன்றியது. பல நூல்களைப் படித்த ஒரு மனநிறைவை அந்தப்பக்கம் தந்துகொண்டிருக்கிறது.

 காரிருளைப் பழிப்பதைவிட நாம் ஏன் அகல்விளக்காய் அமையமுயற்சிக்கக் கூடாது என்று தோன்றியது. சல்லடை போல் நல்லதைவிட்டுவிடாமல் முறம் போல் தூசுதும்புகளை நீக்கி நல்லனவற்றையே வைத்திருப்பவர்களும் இருக்கும்போது, நாம் நம்பிக்கைக் கட்டுரைகளை, வாழ்வியல் கட்டுரைகளை,ஒப்பற்ற தலைவர்களின் உயரிய வாழ்வியலை எழுதலாமே என்று முடிவெடுத்தேன். 

என் கட்டுரை என் பார்வையில் வெளியாகும் அன்று அதிகாலையிலேயே படித்துவிட்டு லண்டனில் இருந்தும் பங்களாதேசிலிருந்தும்,மலேசியாவிலிருந்தும், மதுரை, காரைக்குடி,கொடைக்கானல்,தேனி,ஸ்ரீவில்லிபுத்தூர்,சிவகாசி என்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரிக்கு வரி வாசித்து என்னைச்  செல்பேசியில் பாராட்டும் அருமையான வாசகர்களை நான் என் வாழ்வில் கண்டது பேரானந்த அனுபவம்.

 வழக்கறிஞர்கள் பேராசிரியர்கள், இல்லத்தரசிகள், வணிகம் செய்பவர்கள், அன்றாடம் உழைத்து வாழும் தொழிலாளர்கள் வாழ்த்துகளைத் தந்து பாராட்டுவோரின்  அன்பால் என் கட்டுரை வெளிவரும் நாள் மிகநிறைவான  நாளாகவே இன்றும் அமைகிறது. 

கட்டுரைக்குக் கீழே செல்பேசி எண்ணையும் தந்துவிடுவதால் உடனுக்குடன் என் எழுத்து குறித்த பலதரப்பட்ட விமர்சனத்தை என்னால் அறிந்து கொள்ளமுடிந்தது. ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டிற்காக மலேசியா சென்றபோது தினமலர் அறிமுகத்தில் நண்பர்கள் பலரையும் சந்த்தித்தேன்.

 நல்லவற்றை அழகாக நயமாக நாம் சொல்லும் விதத்தில் சொல்லவேண்டிய ஊடகத்தில் சொன்னால் உறுதியாக பலன் விளையும் என்பதை என் பார்வை இன்றும் வெற்றிதீபமாக விளக்கிக்கொண்டே இருக்கிறது. 

2014 ஆம் ஆண்டின் இறுதிநாள் கல்லூரியில் இருந்தபோது தினமலர் அதிபர் முனைவர் ராமசுப்பு அவர்கள் செல்பேசியில் பேசினார்கள். இதழியல் துறையில் சாதனை படைத்து முனைவர் பட்டம் பெற்றுவருமான முனைவர் ராமசுப்பு அவர்கள் செல்பேசியில் பேசினார்கள். 

புத்தாண்டில் மலர்வோம் புதுமனிதராய் என்கிற என் கட்டுரையைப் படித்துவிட்டு வரிக்குவரி பாரட்டினார்கள்.

 புத்தாண்டு அன்றுதானே வரும் என்று நினைத்துக் கொண்டிருத்தபோது முந்தைய நாளே வெளியிட்டுவிட்டீர்களே என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே அவர்  சொன்னார் நாளை நம் முன்னாள் சனாதிபதியின் கட்டுரை வெளியாகிறது என்றார், மறுநாள் என் பார்வையில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் கட்டுரை வெளிவந்தது.

 சனாதிபதியாய் இருந்தவரின் கட்டுரை வருவதற்கு முந்திய நாள் அதே என் பார்வையில் என் கட்டுரை வந்தது என் பேறு. அதுமட்டுமல்லாமல் என் பார்வையை டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொடர்ந்து வாசித்து வருகிறார் என்ற செய்தியும் எனக்கு இன்னும் கவனமாகவும் தரமாகவும் எழுதவேண்டும் என்றும் நினைக்கத்தூண்டியது. 

தன்னம்பிகைக் கட்டுரைகள் இளையோரிடம் பெரும்வரவேற்பைப் பெற்றது.அனைத்து வாசகர்களும் உடன் நூலக மாற்றுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருகின்றனர்.

பாரதப் பிரதமரிடம் சிறந்த கட்டுரையாளருக்கான சத்பவனா தேசியவிருதை நான் கல்லூரியில் படித்த காலத்தில் பெற்றிருக்கிறேன்..

ஆனால் அதைவிட உயர்ந்த விருது ,என் பார்வை கட்டுரை மிக நன்றாக வந்திருக்கிறது  என்று சொல்லும் முகம்தெரியாத வாசகரின் நல்வாழ்த்து.பாரதியில் தொடங்கிய என் பார்வை பயணம் எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டுக் கட்டுரையாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.






















தொடர்ந்து அன்பால் அனைவரையும் தன்பால் ஈர்த்துக்கொண்டிருக்கும் ஆசிரியர் திரு.ஜி.வி.ரமேஷ்குமார் அவர்களுக்கும் அதிபர் முனைவர் ராமசுப்பு அவர்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.
 
                                       அன்புடன்
                                      சௌந்தர மகாதேவன்

Sunday, March 22, 2015

குறையொன்றுமில்லை..”- சிரமம் தாண்டிய சிகரங்கள்..




பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
திருநெல்வேலி
9952140275

காலம் அவிழ்த்துப் போடும் புதிர் விந்தையாகத்தான் இருக்கிறது. கண் வலிக்காரர்களைக் கண்டவுடன் ஒதுங்குகிற நாம் அவநம்பிக்கைக்காரர்களை அருகில் வைத்திருக்கிறோம்.

அவநம்பிக்கையைப் புறந்தள்ளி நம்பிக்கையின் அடையாளமாய் திகழும் சிரமம் தாண்டிய சிகரங்கள் சிலரை இந்த நாளில் நினைப்பது இனிமையானது.

 அனைத்து உறுப்புகளும் பெற்றிருந்தும் மனவலிமையில்லாதவர்களுக்கு மத்தியில் ஓரிரு புலன்கள் அதன் பணியைச் செய்யாவிட்டாலும்கூட மனஉறுதியோடு மாற்றுத்திறனை வளர்த்துக்கொண்டு சாதனையாளர்களாய் தடம்பதித்து வரலாற்றில் இடம்பிடித்த மாற்றுத்திறனாளிகள் மகத்தான சாதனையாளர்கள்; பிரியத்தைப் பிரியமாகப் புரியவைப்பதில்தான் வாழ்க்கை வாழ்கிறது.வாழ்வில் பிரியம் வைத்து தடைகளை உடைத்தெறிந்தவர்களின் வாழ்க்கை நமக்கு நம்பிக்கை தருகிறது.

இலக்கியம் படைத்த இரட்டைப் புலவர்கள்
..............................................................................................
எண்ணம் கிண்ணம் போன்றது, ஊற்றியதை ஏற்றுக்கொள்ளும் அப்படியே! தன் வடிவத்தில்.ஒருவர்கண்களால் மற்றவர் பார்த்து,ஒருவர் கால்களால் மற்றவர் நடந்த அதிசயம் நடந்தது அவ்விருவர் வாழ்விலே.. சோழ நாட்டில் பிறந்த இளஞ்சூரியர்,முதுசூரியர் எனும் இருபுலவர்கள் தில்லைக் கலம்பகம் உள்ளிட்ட அரிய இலக்கியங்கள் படைத்த சாதனையாளர்கள்..நினைத்தவுடன் கவிபாடும் ஆற்றல் மிக்கவர்கள்.

இவர்களில் ஒரு புலவருக்குப் பார்வைத்திறன் கிடையாது,மற்றொரு புலவருக்கு நடக்க இயலாது.நடக்கஇயலாத புலவரைக் கண்பார்வைத்திறனற்ற புலவர் தூக்கித்தன் தோள்களில் வைத்து மேலே அமர்ந்தவர் பார்த்துச் சொல்லும் திசையில் நடப்பாராம்.இருபுலவர்களும் கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள்.நடக்கஇயலாதவர் செய்யுளின் முதலிரு அடிகளைப் பாட கண்பார்வையற்றவர் அவர் பாடியதைக் கேட்டு சரியாக அச்செய்யுளைப் பாடிமுடிப்பாராம்.ஒருவர் புலன்களை மற்றவர் பயன்படுத்தி இறவா இலக்கியங்களைப் படைத்தது சாதனைதானே.

இசைமேதை பீதோவன்
.....................................................
உலகின் மிகப்பிரபலமான இசைமேதையாகத் திகழ்ந்த பீதோவன்,மிகக் கடினமான சிம்பனியில் பாடலையும் சேர்த்து ‘கோரல் சிம்பனியை’ உருவாக்கி லட்சக்கணக்கான இசைரசிகர்களின் காதுகளைக் கவுரவப்படுத்தியபோது அவர்களின் கைதட்டலைக்கூடக் கேட்கத் திறனற்றவராக மாறியிருந்தார்.

குடித்துவிட்டு அடித்துத் துன்புறுத்திய தந்தை,கண்ணெதிரே இறந்துபோன சகோதர்களின் இறப்பு,குடும்பத்தின்  கடன்சுமை,காதல் தோல்வி போன்ற எதிர்மறையான நிகழ்வுகள் பீதோவனை மூர்க்கத்தனமான மனிதராய் மாற்றின.நிம்மதிதேடி அவர் விரும்பிச்செய்த செயல்கள் அவர் உடல்நலத்தைக் கெடுத்துக் காதுகளின் கேட்கும்திறனைக் கெடுத்தன.உலகமே போற்றிய சிம்பனி இசைக்கோர்வையை உருவாக்கியவரே அதைக் கேட்கமுடியாவிட்டாலும் உலகம் இன்றும் பீதோவனைப் போற்றுகிறது மகத்தான மாற்றுத்திறன் கொண்ட இசைமேதையாக.

குமரகுருபர சுவாமிகள்
....................................................
ஐந்துவயது வரை வாய்பேசா சிறுவராக திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊரில் வாழ்ந்து, திருச்செந்தூர் திருமுருகன் திருவருளால் பேசும்திறன் பெற்று கந்தர்கலி வெண்பா,கயிலைக் கலம்பகம்,மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்,நீதிநெறி விளக்கம்,முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்,சகலகலாவல்லிமாலை போன்ற பதினைந்து நூல்களைத் தந்த குமரகுருபர சுவாமிகள் ஒப்பற்ற சாதனையாளர்.

“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணா யினார்
 
சாதனையாளராய் மலரவேண்டுமானால் உடல்வருத்தம் பாராமல்,பசியைக்கூட நினைத்துப் பார்க்காமல், தூங்காமல்,தனக்கு யார் எந்தத் தீமை செய்தாலும் அதைப்பற்றி எதுவும் எண்ணாமல்,பாராட்டியோ விமர்சித்தோ சொல்லப்படும் செய்திகளைப் பெரிதாய் கருதாமல் தன்பாதையில் துணிவுடன் பயணிக்கவேண்டும் என்ற அருமையான பாடலை ‘நீதிநெறி விளக்கம்’ நூலில் தந்த ஒப்பற்ற சாதனையாளர் குமரகுருபர சுவாமிகள்.

தாமஸ் ஆல்வா எடிசன்
......................................................
மூளைவளர்ச்சிக் குறைந்தவரென்றும்,காதுகேட்கும் திறனற்றவரென்றும் பள்ளியில் ஆசிரியர்களால் குறைசொல்லப்பட்ட  தாமஸ் ஆல்வா எடிசன் சிறுவன்,ஏழுவயதில் ஏற்பட்ட உள்ளெழுச்சியால் 1093 பொருட்களைக் கண்டறிந்து உலகம் போற்றும் மகத்தான அறிவியல் மேதையாக மாறியது விடாமுயற்சியாலும் தொடர்பயிற்சியாலும்தான்.எட்டரை வயதில் பள்ளிக்குச் சென்றவரை ஆசிரியரின் சுடுசொற்கள் பள்ளிப்படிப்பை நிறுத்துமளவு கடுமையாய் பாதித்தது.

வீட்டில் தன் தாயாரிடம் கற்றகல்வி புதுமையான கண்டுபிடிப்புகளில் நாட்டம் கொள்ளுமளவிற்கு தன்னம்பிக்கை உடையவராய் மாற்றியது.நீயூட்டனும்,பாரடேயும் சிறுவயதில் அவரை நூல்கள் மூலம் வந்தடைந்தார்கள்.ரயில் நிலையத்தில் செய்தித்தாள்போட்டு சம்பாதித்த பணத்தை ஆய்வுப் பயன்படுத்தினார்.தானாக இயங்கும் தந்திப்பதிவுக்கருவி,கிராமபோன்,மின்விளக்கு, போன்ற சாதனங்களைக் கண்டறிந்தார்.மூளைவளர்ச்சிக் குறைந்தவரென்றும் செவித்திறன் குறைந்தவரென்றும் இகழப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் 84 வயதில் காலமானபோது உலகநாடுகள் மின்விளக்கை அணைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தின.

சாதனைப் பெண்மணி ஹெலன் ஹெல்லர்
.................................................................................................
எல்லாக் குழந்தைகளையும் போல் நன்றாகத்தான் பிறந்தது,ஒன்றரை வயது வரை எல்லாக் குழந்தைகளையும் போல் நன்றாக வளரத் தொடங்கியது.திடீரென்று ஒரு நாள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வாய் பேசமுடியாது,காதுகேட்கும் திறன் இல்லாமல் போனது.வளரவளரத் தன் தேவைகளைக் கூட அடுத்தவர்களிடம் தெரிவிக்கச் சிரமப்பட்டது.

எல்லாக் கதவுகளும் மூடப்பட்ட நிலையில் அந்தக் குட்டிதேவதை மீது அன்பைச் செலுத்த ஆசிரியர் வடிவில் ஆன் சல்லிவன் வந்தார்.சிறப்புக்கல்வியை அந்தக் குழந்தைக்குப் பொறுமையாய் தந்தார்.இடதுகையில் பொம்மையைத் தந்து வலதுகையில் ஆட்காட்டிவிரலால் “பொம்மை” என்று எழுதினார்.உச்சரிக்கும்போது உதட்டில் விரலை வைத்து உச்சரிப்பின் அதிர்வை உணரவைத்தார்.பேச்சுப்பயற்சி தந்தார். 

ஆன் சல்லிவனின் விடாமுயற்ச்சியால் அந்தக் குழந்தை வளர்ந்து ஹெலன் ஹெல்லர் என்ற பெயரில் எல்லா மேடைகளிலும் பேசினார்.செவித்திறன் குறைந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளைச் சாதனையாளராய் உருவாக்கினார்.

எவரெஸ்ட் சிகரம்தொட்ட அருணிமா சின்ஹா
.......................................................................................................
 “சிகரத்தை அடைய எங்கிருந்து பயணத்தைத்தொடங்கவேண்டும்?” என்று தன் குருவிடம் கேட்டான் சீடன்,உடன் அவர்,” சிகரத்தை அடையவேண்டுமானால் சிகரத்தின் உச்சியிலிருந்து தொடங்கவேண்டும் என்றார் குரு.அது எப்படி குருவே ? என்றான் சீடன்.”சீடனே! நீ எப்போது சிகரத்தை அடையவேண்டும் என்று நினைத்துவிட்டாயோ அப்போதே உன் மனம் சிகரத்தை அடைந்துவிட்டது.ஏறிநடந்து நீ இரண்டாம் முறையாய் சிகரம் தொடுகிறாய்” என்றாராம்.

தேசிய அளவில் சாதித்த கைப்பந்து வீராங்கனை அருணிமா சின்ஹா,லக்னோவிலிருந்து புதுடெல்லிக்கு தொடர்வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தார்;சற்றும் எதிர்பாராத வகையில் ரயில்கொள்ளையர்கள் வண்டியில் ஏறிப் பயணிகளிடம் நகைகளைக் கொள்ளையடிக்க அவர்களை எதிர்த்து வீரத்துடன்போராட அவர்கள் அருணிமாவை ஓடும்வண்டியிலிருந்து வெளியே வீச அடுத்த தன்டவாளத்தில்  சென்றுகொண்ருந்த ரயில் வண்டியில் சிக்கித் தன் ஒருகாலை இழந்தார்.ஆனாலும் மனம்தளராமல் மூச்சுப்பிடித்து முன்னேறி 25 வயதில் ஒற்றைக்காலில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டினார் உத்தரப்பிரதேசத்தின் இலட்சியப் பெண்மணி அருணிமா சின்ஹா. ஆம்! காலை இழந்தாலும் அவர் நம்பிக்’கை’யை இழக்கவில்லை.


ஆணியில் தொங்கும் அப்பாவின் சட்டை அவரை அப்படியே ஞாபகப்படுத்துவதைப் போல் நம்பிக்கை எனும் ஒற்றைச்சொல் நம்மை செயற்கரிய செயல்கள் செய்ய அழைத்துச் செல்கிறது. நீரெழுச்சியைப் போல் பேரெழுச்சியோடு பயணப்படவேண்டிய நேரத்தில்; தயக்கத்தைத் தள்ளி நிறுத்துவோம்.எதுவும் குறையில்லை..எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் விட்டு விடுதலையாகிப் பறப்போம் சிட்டுக் குருவிகளாய் ...விரிவானம் வெளியே காத்திருக்கிறது.
*
கட்டுரையாளர் பாரதப்பிரதமரிடம் தேசியவிருது பெற்றவர்.







வியர்வை சிந்தாமல் விந்தை இல்லை



               இமயம் ஏறலாம் வா இளைஞனே!

பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத்தலைவர்,

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), திருநெல்வேலி



* இந்தியாவின் இளையதூண்கள் இளைஞர்கள், சாதனை எனும் சொல்லின் நிகழ்கால நிஜங்கள் இளைஞர்கள். வெந்நீர் நிரப்பிய தவலைப் பானை மாதிரி கவலைப் பானையில் கண்ணீர் நிரப்பித் திரியும் பழக்கம் இளைஞர்களுக்கு இல்லை. துள்ளித்திரியும் கவலையற்ற காளைகள் அவர்கள். 

விழியுமில்லை ஒளியுமில்லை ஆனாலும் இருட்டிலும் இயங்குகிறதே வவ்வால்! நினைத்ததை முடித்துக்காட்டும் வல்லமை அவர்களுக்கு உண்டு. ஒரு பறவையின் பரந்துபட்ட ஆகாயத்தைப் போல் விரிந்து கிடக்கும் விரிவானில் வலம்வரும் பட்டாம் பூச்சிகள் அவர்கள்.  இயக்கத்தின் அடையாளம் இளைஞர்கள் . 


* நினைவு என்னும் நெடுவனத்தில் மலர்களும் இருக்கும் மலைப்பாம்புகளும் இருக்கும், தடைகளை இன்முகத்துடன் ஏற்றுத் தாண்ட முயன்ற இளைஞர்களையே வரலாறு வரவில் வைத்திருக்கிறது. சிகாகோ மாநகருக்குச் சென்று “சகோதர சகோதரிகளே!”  என்ற இரட்டைச் சொற்களால் இந்தியப் பண்பாட்டின் உன்னதத்தை உலகிற்கு உரக்கச் சொல்லி, இந்தியா பற்றிச் சிந்தியாதவர்களையும் தன்னைச் சந்திக்க வைத்துவிட்டுக் கப்பலேறிய கம்பீரமான இளைஞர் சுவாமி விவேகானந்தரின் விந்தை சாதாரணமனதா?

* சாதாரண தோல்விகளுக்கும் சதாரணமாகிப் புலம்பும் இளையோர் கூட்டமாக இளைய சமுதயத்தை ஏன் சொல்லவேண்டும்? சுதந்திரப்போரின் தீயாகதீபங்களைக் கொடூரமாய் துன்புறுத்திக் கொடுமைப்படுத்திய ஆஷ் எனும் ஆங்கிலேய அதிகாரியை, மணியாச்சி ரயில்நிலையத்தில் துணிச்சலாய் சுட்டுக்கொன்றுத் தன் இன்னுயிரையும் தந்த வீர்வாஞ்சிநாதன் எனும் இளைஞர் அநீதியை அழித்த அக்கினிக் குஞ்சாயிற்றே! 

* சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையாக விளங்கிய சகோதரி நிவேதிதா, பாரதி எனும் இளைஞரின் உள்ளுக்குள் ஒளிந்திருந்த அக்கினிக் குஞ்சைச் சொற்களால் கூர்தீட்டிச் சாதனைவானில் சிறகடிக்க வைத்த இளையதீபம். 1905 இல் பாரதி,சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தான். “பாரதத் தாய் உன் கண் எதிரே கையில் விலங்கோடு நிற்க, நீ உடைத்தெரியாமல் நிற்கலாமா பாரதி!” என்று சினத்தோடு அவர் வினவ 23 வயதேயான இளையபாரதி சிலிர்த்தெழுந்தான்; ”சொல்லுக்கடங்காவே பராசக்தி, சூரத்தனங்களெல்லாம் வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழியென்றே துதிப்போம்” என்று தேசம் காக்கத் தெய்வத்திடம் பாரதி வல்லமை வேண்டினான். பாரதிக்கு சகோதரி நிவேதிதா மகத்தான இளைய சக்தியாகப் புலப்பட்டார். பிரகாசமான முகத்தோடு உறுதியோடு பேசிய சகோதரி நிவேதிதாவிடம் பேசியபின் பாரதியின் தன்னம்பிக்கை இன்னும் கூடியது.சகோதரி நிவேதிதாவைச் சந்தித்து உபதேசம் பெற்ற நிகழ்வையும், அவரிடம் பெற்ற ஞானதீட்சையைத் தன் இறுதிக்காலம் வரையிலும் சக்தியாய் பாரதி மனதில் தேக்கிவைத்திருந்தார். ஒருதீபம் இன்னொருதீபத்தை ஏற்றிவைத்து அடையாளம் காட்டிய விந்தை அன்று நிகழ்ந்தது.


* எண்களைக் கண்களாய் கருதி, எண்கோட்பாடுகளையும் செறிவெண் கோட்பாடுகளையும் உலகின் பார்வைக்குக் கொண்டுசென்ற ஒப்பற்ற இளைய கணிதவியல் சாதனையாளர் சீனிவாச ராமானுஜம் என்ற இந்த உலகில் வாழ்ந்தது 33 ஆண்டுகள்தான். வாழ்கிற வருடங்களுக்கும் சாதித்தலுக்கும் சம்பந்தமில்லை என்று சப்தமாய் சொல்லிச் சாதிக்கிறவர்கள் இளைஞர்கள்.

* வாழ்வை அறுத்தெறியும் வாளல்ல வாழ்வு.நெஞ்சம் நினைத்தால் பஞ்சுபோல் லேசாகி வானையும் எட்டலாம்! சாதனை வானிலும் பறக்கலாம் என்று காட்டிய அந்த இளம்சாதனையாளர் நம்மை வியக்க வைக்கிறார்; உள்ளிருந்து இயக்கவைக்கிறார் “ எங்களால் சாதனை செய்து சிறக்கவும் முடியும், இளம் வயதில் கேப்டனாய் பறக்கவும் முடியும்” என்று 16 வயதில் விமானம் ஓட்டும் பயிற்சியைத் தொடங்கி,  18 வயதில் விமான ஓட்டியாய் உரிமம் பெற்று, 21 வயதில் இளைய கமாண்டராய் பொறுப்பேற்று 2100 மணிநேரம் விமானம் ஓட்டி, லிம்கா சாதனையாளர் பட்டியலில் “உலகின் இளம்விமானக் கேப்டன்” எனும் சிறப்பினைப் பெற்ற சாதனைப் பெண்மணி பவிகா பாரதி இளைஞர்களின் முன்னேற்ற முன்மாதிரி. 

* ஆம் ! எழுதாத பேனாவை எவர்தான் பையில் வைத்திருப்பார் ? ஆறிப்போன தேநீரை யார்தான் விரும்புவார் ? சூடுதான் தீர்மானிக்கிறது உயிர்மையின் உன்னதத்தை இயங்கிக்கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தையே உலகம் உள்ளபடி விரும்புகிறது. வியர்வை சிந்தாமல் விந்தை இல்லை.

*  தடையாளக் கற்றுக்கொள்வதுதான் வெற்றியின் முதல்படி.முருங்கையை முறிக்க ஒருகை போதும்,ஆனால் தேக்கை முறிக்கப் பலகரங்கள் வேண்டும். ஒற்றுமையின் அடையாளம் இளைய சமுதாயம்.

* சிக்குப்பட்ட நூல்கண்டே நம்மைச் சிரமப்படுத்துகிறது, சிக்கலில் தவிக்கும் மனமே நம்மைக் கலவரப்படுத்துகிறது. இளைத்துப் போவதோ,தோல்வி கண்டு களைத்துப் போவதோ இளைய சமுதாயத்தின் பண்புகள் இல்லை.

* வழுக்கிவிழாமல் வாழ்க்கை இல்லை,விழுந்து எழாதவன் வீரனுமில்லை என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். தேக்கிலை போல் பரந்துவிரிந்திருக்கிறது இந்த வாழ்வெனும் பூங்காவனம்.அதில் மலர்ந்து விரியும் வாசமலர்கள், நிகழ்காலத்தின் பாசமலர்கள் அவர்கள்.

* அன்பு இளைய சமுதாயமே! நீங்கள் காலத்திற்காக காத்திருக்க வேண்டாம்,சில நேரங்களில் சிலருக்கு; அவர்கள்காலமான பின்தான் காலமே வருகிறது. காலத்தைவிஞ்சி நாம்செய்யும் செயல்களே நம்மைப் பலகாலம் கடந்தும் வாழவைக்கிறது. 

* இந்தச் சமுதாயம் சில கணங்களில் உங்களை ஓரங்கட்டுவதற்காக நீங்கள் துயரப்பட வேண்டியதில்லை

. கலங்கரை விளக்குகள் கரையோரமாகத்தானிருக்கும். மைல்கற்கள் நாம் கடக்கவேண்டிய தூரத்தை அமைதியாய் தெரிவித்தபடி சாலையோரமாகத்தான் இருக்கும்.

 காலத்தைவிட வேகமாய் இயங்குகிறவனை,மூச்சுப் பிடித்து முன்னேறுகிறவனின் முயற்சியை யாராலும் முறித்துப்போட்டுவிட முடியாது. 

* வளையோர் சூடார்,இளையோர் தேடார் ஆனாலும் எழுச்சியோடு பூக்கவில்லையா எருக்கம் பூக்கள்? முள்ளுக்கு அருகிலும் முனைப்போடு பூத்திருக்கும் ரோஜாக்கள் மாதிரிச் சவால்களுக்கு மத்தியிலும் சந்தோசமாய் பூத்துக்குலுங்குங்கள்.

* வாழ்வின் யதார்தத்தைக் ஏற்றுக்கொள்ளுங்கள், தோல்விகளையும் இன்முகத்தோடு பெற்றுக்கொள்ளுங்கள்.வருத்தப்படுவதற்காகவோ தோல்வியின் வாசலில் நிறுத்தப்படுவதற்காகவோ நீங்கள் பிறக்கவில்லை என்பதை உணருங்கள்.

* அண்டவிடாதிருங்கள் அவநம்பிக்கை எனும் காலக்கரையானை.. அனுமதித்தால் அரித்துவிடும் அனைத்தையும் அடியோடு.  சிந்தித்துப்பாருங்கள் நம்மை நிந்தித்தவர்களும் நிச்சயம் நம்மை   இயங்கத்தூண்டி நமக்கு நல்லது செய்தவர்கள்தான். ஆகவே எதிரிகள் குறித்து எரிச்சலடையவேண்டியதில்லை.

* *உயரத்தூண்களே நீங்கள் துயரத்தூண்களாக ஒருநாளும் மாறவேண்டாம்! 

  விருப்பதோடு செய்யும் செயல்களே நம் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. உங்கள் திசைகளைத் தீர்மானியுங்கள் வானம் வசப்படும்.  நெருப்பை உள்வாங்கும் வைக்கோற்போர் நெடுநேரம் எரிகிற மாதிரி வெறுப்பை உள்வாங்கும் மனம் வெந்துதணியும் அனல்வனமாகிறது.

 யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டு ரத்தம் தேவைப்படும் போது இளையோர் உலகம்தான் இன்றும் எந்தப்பேதமும் பாராமல் ரத்ததானம் செய்துவருகிறது.மனிதநேயத்தின் வாழும் சான்றுகளாக இளையபாரதம் திகழ்வது எத்தனை அற்புதமானது! ஆகவே! இனி திட்டாதீர்கள் அந்தத் தீர்க்கத்தரிசிகளை.அவர்களுக்கு வாய்ப்புகள் தந்து ஊக்கப்படுத்துங்கள்..காரணம் அவர்கள் உன்னதமானவர்கள்.