Saturday, May 28, 2016

பயணங்கள் முடிவதில்லை : முனைவர் சௌந்தர மகாதேவன்





                  பலப்படுத்தும் பயணங்கள்

முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275

பயணமெனும் நகர்வுத் தியானம்
 
உங்கள் குடும்பத்தாரோடு சுற்றுலா சென்ற நிமிடங்களை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? எப்போதும் குறைவாகப் பேசும் உங்கள் மகன் உங்களுக்கு வெகுநெருக்கமாகியிருப்பான். இரண்டடி தூரத்தில் நின்று பேசுகிற உங்கள் மகள் உங்களுக்கு நெருக்கமாகியிருப்பாள். எப்போதும் உங்கள் குறைகளையே பிரகடனப்படுத்தும் உங்கள் அலவலக நண்பரோடு சுற்றுலா சென்றதுண்டா? சென்றிருந்தால் நீங்களும் அவரும் விசாலமாயிருப்பீர்கள். தூரங்களைத் துரத்தும் நேரங்களைச் சுற்றுலா நமக்குச் சத்தமில்லாமல் தந்துசெல்கிறது. பிணக்கை விடுத்துப் பிணைப்பையும் ஓர் இணைப்பையும் சுற்றுலா  உருவாக்குகிறது. பிளவுபட்ட மனங்களை நெருக்கிநிறுத்துகிறது. ஓட்டத்தையும் முக வாட்டத்தையும் தடுத்து இறுக்கத்தை நிறுத்தி நெருக்கத்தை உருவாக்குகிறது. பண்பாட்டை நமக்குக் கற்றுத்தருகிறது. நல்ல பழக்கவழக்கங்களை நமக்குக் கற்றுத்தருகிறது. வியப்பின் விரிபரப்பில் அப்பயணங்கள் நம்மை நகர்த்திவைக்கிறது.

பயணமெனும் நகர்வுத் தியானம்

பயணம் ஓர் நகர்வுத் தியானம். பயணப்படும்போது நாம் பக்குவம் அடைகிறோம். பயணம், பாதங்களால் நடக்கும் பக்குவத் தியானம். பயணப் பொழுதுகளில் நீங்கள் பக்குவமாகியிருப்பீர்கள். பயணப்பொழுதுகளில் உங்கள் விலாக்களில் விருட்டென்று சிறகுகள் முளைத்திருக்கும். பயணப்பொழுதுகளில் உங்கள் சிக்கல்களுக்கும் விக்கல் எடுத்திருக்கும்.பயணப்பொழுதுகளில் நீங்கள் இயற்கையின் இதயத்தில் இருந்திருப்பீர்கள். தீட்டத்தீட்ட ஒளிர்கிற வைரங்கள் மாதிரி நடக்கநடக்க நீங்கள் காலத்தையும் கடந்திருப்பீர்கள். வெறுமையிலும் பொறுமையைக் கற்றிருப்பீர்கள், சகிப்புத்தன்மை உங்கள் வாழ்விலும் சாத்தியமாயிருக்கும். அலுவல் அழைப்பில்லா அந்த அருமைப் பொழுதுகளில், செல்பேசிகள் செவிகளை வருத்தாத அந்த அமைதிப் பொழுதுகளில் வினாடிகளில்  சிந்தையை நிறைத்திடும் விந்தை நிகழ்வதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நாம் கடிகாரம் கட்டிக்கொண்டுள்ளோமோ? நம்மைக் கடிகாரம் கட்டிக்கொண்டிருக்கிறதோ! என்று சந்தேகப்படும்படியாக வாழ்வின் முதல்பாதியில் டென்ஷனுக்கும் அடுத்தபாதியில் பென்ஷனுக்கும் தன்னைக் கொடுத்துவாழும் மனிதர்களை  பயணப்பொழுதுகள் பழுதுபார்க்கின்றன. பூமியின் பிரம்மாண்டத்தை நீங்கள் புரிந்திருப்பீர்கள். நீங்கள் வசிக்கும் மண்ணின் மகத்துவத்தை உங்கள் மனம் கண்டு மலைத்திருக்கும். 

சுற்றிக்கொண்டேயிருப்பதே சுகம் 

ஆம்! பயணம் அற்புதமானது. சோகத்தைத் தூக்கி எறிந்த சுகவினாடிகளை நாம் ஏன் சுகிக்க மறந்துவிட்டோம். யாரையாவது நீங்கள் துல்லியமாகப் புரிந்துகொள்ள விரும்பினால் அவரோடு இரண்டுநாட்களாவது பயணப்படுங்கள்,அவர் அந்தராத்மாவைக் கூட நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும். 

தோன்றிய வினாடியிலிருந்து சுற்றிக்கொண்டே இருக்கும் பூமிமாதிரி இடையறாது சுற்றிக்கொண்டேயிருப்பதன் சுகம் தனியானது. அதனால்தான் காசியில் வசிப்பவனுக்கு ராமேஸ்வரமும் காஞ்சியில் வசிப்பவனுக்கு ரிஷிகேசும் புனிததலங்களாய் முன்னிறுத்தப்பட்டது.

புத்தரின் புரிதல் 

நேபாளத்தின் லும்பினியில் பிறந்த சித்தார்த்த கௌதமர் சுகபோக வாழ்வைவிட்டு அரண்மனையைவிட்டுத் தேசாந்திரியாகப் பலபகுதிகள் அலைந்து திரிந்து கயை எனும் இடத்தில் போதிமரத்தடியில் ஞானம் பெற்றுப் புத்தராக மாறினார். கபிலவஸ்துவிலிருந்து கிளம்பிய புத்தர் நடந்தே இந்தியாவெங்கும் பயணத்திருக்கிறார். மனித தரிசனத்திற்கு அவரது பயணஅனுபவங்களே பெருந்துணை புரிந்தன. வழிநெடுகிலும் அவர் இயற்கையைக் கண்டு பேருவகை கொண்டார். உயிரினங்களையும் பயிரினங்களையும் ரசித்தபடி பயணித்தார்.

பலம்தந்த பயணங்கள்

கல்கத்தா நகரில் பிறந்த சுவாமி விவேகானந்தர் மிகுந்த சிரமத்திற்கிடையே சிகாகோ மாநகருக்கு மேற்கொண்ட பயணம் இந்தியப் பண்பாட்டை உலகுக்கு உணரவைத்தது. இமயம் முதல் குமரிவரை அவர் கடந்தபாதைகள் அவருக்கு இந்தியா குறித்த விசாலமான பார்வைக்குக் காரணமாய் அமைந்தன. அவருக்குத் தென்னிந்தியா மிகவும் பிடித்தபகுதியாய் இருந்தது.

பாரிஸ்டர் பட்டம் பெற்ற புகழ்மிக்க வழக்கறிஞராய் வழக்குநடத்தத் தென்னாப்ரிக்கா மேற்கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் தென்னாப்ரிக்கப் பயணம் இந்தியவிடுதலைப் போராட்டத்திற்கு அவரை அழைத்துவந்தது.

மகாகவி பாரதியின் பயணங்கள் தமிழக மக்களுக்கு எழுச்சியையும் உற்சாகத்தையும் தந்தன. எட்டயபுரத்தில் பிறந்து திருநெல்வேலியில் கல்விகற்று காசிசென்று உயர்கல்வி முடித்து பலமொழிகள் கற்று சென்னையிலும் புதுவையிலும் கடையத்திலும் வாழ்ந்து இயற்கையை ரசித்து “ நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?” என்று கேட்கக் காரணமாய் அமைந்த பயணங்களை எப்படிப் புகழ்வது?

உலகைச் சுற்றிய பயணிகள் 

போர்ச்சுக்கீசிய நாடுகாண் பயணியாகக் கிளம்பிய வாஸ்கோடகாமா, ஆப்ரிக்காக் கண்டத்திலிருந்து 23 நாட்கள் இந்தியப்பெருங்கடலில் பயணித்து இந்தியாவின் மலபார் கடற்கரைப் பகுதியை அடைந்தார்.
 கிறிஸ்டோபர் கொலம்பசின் பயணத்தால் அமெரிக்கநாடு உலகின் பார்வைக்கு வந்தது. சீனப்பயணியான யுவான்சுவாங், கைபர் கணவாய் மூலமாக இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் அற்புதமானது. பதினாறு ஆண்டுகள் இந்தியாவில் தங்கி இந்தியாவின் தொன்மையை ஆராய்ந்தார். காஷ்மீர், பாடலிபுத்திரம் போன்ற பகுதிகளுக்குப் பயணித்து புத்தசமயம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். நாளந்தா பல்கலைக்கழகத்தில் தங்கிப் பயின்றுள்ளார். சமஸ்கிருதத்தில் இருந்த புத்தசமயநூல்களைக் கற்றுணர்ந்து சீனமொழியில் மொழிபெயர்ப்பது அவர் பயணத்தால் நிகழ்ந்த நிகழ்வு.

பயணித்த கடல் பார்த்த கண்கள், நதியில் கால்நனைக்கும் கால்கள், அருவியில் நனையும் அழகுத்தலைகள், தேயிலைத் தோட்டத்தில் நுரையீரல் நிறைக்கும் வெகுசுத்தமான ஆக்சிஜன் காற்று, பயணத்தடங்களில் கிடைக்கும் சூடானதேநீர், இடைப்படும் இனிய தேசாந்திரிகள், மாசுமருவற்ற அற்புதமான ரயில்சிநேகம் எல்லாம் கிடைத்து எவ்வளவு நாட்களாயிற்று? 

இன்னும் திருமலை நாயக்கர் மகால் பார்க்காத திருவாளர்கள் எத்தனைப் பேர்? தேக்கடிகூடப் பார்க்காமல் கொசுக்கடியில் தவிப்போர் எத்தனைப்பேர்”? மதுரை ஈர்ப்பில் அழகர்கூட ஆண்டுக்கொருமுறை அழகர்கோயிலை விட்டுக் கிளம்பிவந்துவிடுகிறார். ஆனால் இல்லம் விட்டு நகராமல் இன்னும் நாம்! 

நிம்மதி தரும் பயணங்கள்

ஓடும் நீர்தானே நதியாகும், இயங்காமல் இருக்கிறஇடத்தில் இருப்பது சதியாகும். குதிரைப் பந்தயத்தில் உள்ள குதிரைகளைப்போல் ஓடிக்களைக்கும் போது வலுகுறைந்ததாய் வாழ்க்கை நம்மை வாசலில்கொண்டு நிறுத்துகிறது. வாழ்வின் வசந்தத்தை ரசிக்க நாம் வெளிநாடுகளுக்குதான் விமானத்தில் பறக்கவேண்டும் என்பதில்லை. மெட்ரோ ரயில்பயணம் கூட மெட்டுப்போட்ட பாட்டு நம்மைக் கட்டிப்போடுகிற மாதிரி இனிமையானதுதான். பயணப்பொழுதுகளில் பஞ்சுபோல் நெஞ்சு மாறுகிறது. 

சோகம் தொட்டுச் சென்றே பழக்கப்பட்ட நமக்கு மேகம்தொடும் அனுபவம் தரும் ஊட்டியும் கொடைக்கானலும் நம் பர்சுக்கு இதமான பக்கத்தில்தான் இன்னும் இருக்கிறது. பேருந்துப்பயணம் எத்தனை அற்புதமானது சன்னலைத் தாண்டி நம் மீது சில்லென்று வீசும் பூங்காற்று, நாற்கரச்சாலையின் நடுவே அழகாகப் பூத்திருக்கும் அரளிச்செடிகள், இருபுறமும் பின்னால் ஓடும் மரங்கள் யாவும் அழகியல் காட்சிகள்.
ரயில்பயணம் இன்னும் அழகு. நம் வீடுபோல் நடக்கவும், நிம்மதியாய் தூங்கவும் எந்த அலுப்பில்லாமல் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து பலமாநிலங்களைப் பார்த்துரசிக்கவும் வாய்ப்பளிக்கவும் உதவும் ரயில்பயணம் பல நண்பர்களை நமக்குத் தந்திருக்கிறதே. 

கேரளக்கடற்கரையின் படகுப்பயணம், கன்னியாகுமரிக் கடலில் ஸ்டீமர் பயணம், கிராமத்தில் கட்டைவண்டிப் பயணம், உடல்நலத்திற்கு உதவும் சைக்கிள்பயணம், சிறுதெருக்களில் நுழைந்து வெளிவரும் ஆட்டோப் பயணம், பஞ்சுப்பொதிகளுக்குள் நுழைந்ததுபோல் ஆகாயத்தைக் கிழித்தபடி விரிவானில் பலநாடுகளைக் கடக்கும் இனிமையான விமானப்பயணம் ..என்று விதவிதமாய் அவரவர் வசிதிக்கு ஏற்றபடி இனிமையான பயணங்கள். 

நாமும் பயணிப்போம்

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்று நன்றி சொல்லி இந்தக் கோடைவிடுமுறைக்கு நம் பொருளாதாரத்திற்கு ஏற்ற ஏதேனும் ஓரிடத்திற்காவது நம் குழந்தைகளை அழைத்துச் செல்வோம். சலவை செய்த பளிங்கு மொட்டாய் திகழும் தாஜ்மகால், அழகான அரண்மனைகளை அதே பழைமையோடு வைத்திருக்கும் ஜெய்ப்பூர் மாநகரம், இயற்கையின் தொட்டிலாகத் திகழும் கேரளமலைப் பகுதிகள், அழகான ராமேஸ்வரத்தீவு, பாபநாசம் அருவி, மாஞ்சோலை, மூணார், வால்பாறைத் தேயிலைத் தோட்டங்கள், கம்பம் குமுளி இயற்கை அழகுகள், மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில், திருமலைநாயக்கர் மகால், கோடையிலும் குளிரவைக்கும் கொடைக்கானல், ஊட்டி  ஒன்றை ஒன்று முந்திச் செல்லும் அசுரவேக வாகனங்கள் அழகர்கோயில் பனிச்சுனைத் தேன்நீர், சாத்தூர் வெள்ளரிக்காய், கோவில்பட்டி கடலைமிட்டாய், திருநெல்வேலி அல்வா,மதுரை மல்லி, கொடை ரோடு பழங்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மணப்பாறை முறுக்கு, திருச்செந்தூர் சில்லுக்கருப்பட்டி,கடம்பூர் போளி இவற்றையெல்லாம் பெறுவதற்காக நாமும் பயணிப்போம்.